×

ஊட்டி நகரத்தில் நகராட்சி தற்காலிக கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை நிர்ணயம்

*நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஊட்டி : ஊட்டி நகராட்சி தற்காலிக கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை கட்டணம் நிர்ணயம் செய்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊட்டி நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கூட்டம் துவங்கியவுடன் காந்திநகர் பகுதியில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:

துணை தலைவர், ரவிக்குமார் (திமுக): ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இருந்த 190 கடைகள் முதற்கட்டமாக இடிக்கப்பட்டு அதற்கு பதிலாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்காலிக கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வியாபாரிகளுக்கு தற்போது போதுமான வியாபாரம் நடப்பதில்லை.மேலும், கடைகள் அனைத்தும் சிறிதாக உள்ளது. எனவே, இந்த கடைகளின் வாடகை ரூ.7500 என்பதை குறைத்து வழங்க வேண்டும். மேலும், மார்க்கெட்டின் வெளிப்புறங்களில் மூடிக்கிடக்கும் கடைகளுக்கு ஏலம் விட வேண்டும்.

ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில், நடைபாதைகளில் தேங்கியுள்ள குப்பைகள், மண் குவியல்கள் ஆகியவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகருக்குள் உள்ள ஓர்க்‌ஷாப்புக்களை வேறு புறநகர் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் கூறும் குறைகளை உடனடியாக களைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தல் பகுதியில் உள்ள கால்வாயில் தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 36 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

பிரச்னைக்குரிய வார்டுகளை வரையறை செய்து கொடுக்க வேண்டும். மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்ட நிலையில், தற்காலிக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாற்று இடம் அளிக்கும் போது, ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்க வேண்டும்.

கமிஷனர் ஏகராஜ்: கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட் தற்காலிக கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை நிர்ணயம் செய்யப்படும்.
ஜார்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு கடைகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்று இடமாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்காலிக கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டள்ளது.

அதேபோல், இரண்டாவது கட்டமாக கடைகள் இடிக்கும் முன்பு, அவர்களுக்கும் கடைகள் கட்டி கொடுத்த பின் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்டன் பகுதியில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்ட நிலையில், சாலையோரங்களில் மற்றும் நடைபாதைகளில் தற்காலிக கடைகள் போட அனுமதிக்க கூடாது. ஊட்டி நகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு மண் திட்டுக்கள் கரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை நகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

ஊட்டி ரேஸ்கோர்சில் எவ்வித அனுமதியும் பெறாமல் நிரந்தர குதிரை கொட்டகைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளையும் வரையறை செய்ய வேண்டும். முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வார்டில் பல்வேறு பகுதிகளிலும் புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. எனவே, செடிகளை அகற்ற நடவடிக்கை எடுகு்க வேண்டும். மழை காலம் துவங்கும் முன்பு காந்தல் கால்வாயில் தூர் வார வேண்டும்.

ரவி (திமுக): ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பல கடைகள் திறக்கப்பட்டள்ளது. குறிப்பாக, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெரிய ஓட்டலின் மூன்றாவது மாடிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை திறந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். மேலும், கோத்தகிரி சாலையில் உள்ள பெரிய காம்பளக்ஸ் உரிமையாளர் கோடப்பமந்து கால்வாயின் மேற்புறத்தில் பாலம் அமைத்து பெரிய அளவிலான பார்க்கிங் ஏற்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ் (திமுக): எனது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குறைந்தபட்சம் மூன்று நாளுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுதாகீர் (திமுக): படகு இல்லம் செல்லும் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கழிவு நீர் கால்வாய் செல்ல மோரிகள் அமைக்கப்படாத நிலையில், மீண்டும் சாலை பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இச்சாலையில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிச்சிங் காலனி பகுதியில் தனியார் ஒருவர் 30 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டி வருகிறார். இதனால், அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணிகளை ஆய்வு செய்து, அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீதா (திமுக): குப்பை லாரிகள் முறையாக வருவதில்லை. இதனால், வார்டு முழுவதும் குப்பை தொட்டிகளாக காட்சியளிக்கிறது. எனவே, எனது வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ் (திமுக): எனது வார்டிற்குட்பட்ட பகுதியில் தலையாட்டு மந்து முதல் நொண்டிமேடு வரையில் சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை முறைப்படுத்தி, கால்வாய் அமைத்து கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ப்ரியா (திமுக): எனது வார்டில் குப்பைகளை அள்ளுவதற்கும், மாஸ் கிளினிங் மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. மேலும், எனது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் பழமை வாய்ந்ததாக உள்ளதால், பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனை சீரமைத்து பொதுமக்களுக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கஜேந்திரன் (திமுக): கோடை காலங்களில் ஊட்டி நகரை இணைக்கும் மாற்றுச்சாலையாக உள்ள மஞ்சனக்கொரை சாலையை சீரமைக்க வேண்டும்.

அக்கீம் (அதிமுக): மேரிஸ்ஹில் பகுதியில் 5 பள்ளிகள் உள்ளன. இதனால், நாள் தோறும் பல ஆயிரம் மாணவர்கள் இந்த பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இந்த சாலையோரங்களில் தனியார் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுவதால், பள்ளி வாகனங்கள் வந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து கதடை ஏற்பட்டு வருகிறது. எனவே, இச்சாலையோரங்களில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜயலட்சுமி (காங்) : தீட்டுக்கல் சாலை மிகவும் பழுதடைந்துள்ளன. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் (காங்): பேசுகையில், எட்டினஸ் சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இச்சாலையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் நகர மன்ற கூட்டத்தில் 33-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா, லவ்டேல் காந்தி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது மதிப்பூதியத்தை பதவிக்காலம் வரை பகிர்ந்தளிப்பதாக தெரிவித்தார்.

மண் சரிவில் பலியான இருவர் குடும்பத்திற்கு கவுன்சிலர் உதவி

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊட்டி அருகேயுள்ள காந்தநகர் பகுதியில் தனியார் பங்களா கட்டுமான பணியின் போது, மண்சரிவு ஏற்பட்டு அங்கு பணியாற்றி கொண்டிருந்த 6 பெண் தொழிலாளர்கள் உயிரோடு மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் தமிழக முதல்வர் நிவாரணத்தொகை அறிவித்தார். மேலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர நீலகிரி எம்பி ராசா தலா ரூ.1 லட்சமும், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தலா ரூ.50 ஆயிரமும் வழங்கினர். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.9.5 லட்சம் வரை நிதியுதவி கிடைத்தது. இதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் தலையாட்டு மந்து பகுதியை சேர்ந்த உமா மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

அந்த குடும்பத்திற்கு 33-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா தனக்கு மாதம் தோறும் வழங்கப்படும் மதிப்பூதியத்தில் இருந்து தலா ரூ.2500 மாதம் தோறும் தனது பதவிக்காலம் முடியும் வரை அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

The post ஊட்டி நகரத்தில் நகராட்சி தற்காலிக கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,City Council ,Ooty Municipality ,Ooty Municipal Council ,Vaneeswari ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...